tamilnadu

img

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 0.3 சதவீதம் குறைத்து கணிப்பு - ஐஎம்எஃப் அறிக்கை

ஐஎம்எஃப் அமைப்பு, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தனது முந்தைய கணிப்புகளை விட 0.3 சதவீதம் குறைத்து உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கை (World Economic Outlook Report) ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐஎம்எஃப் என்றழைக்கப்படும் சர்வதேச நிதியம், கடந்த ஏப்ரல் மாதம், 2019 - 20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதமாக இருக்கும் எனவும், 2020 - 21 நிதியாண்டில் 7.5 சதவிகிதமாகவும் இருக்கும் எனச் தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது, அதன் உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.3 சதவீதம் குறைத்து 2019 - 20 நிதியாண்டில் 7 சதவீதமும், 2020 - 21 நிதியாண்டில் 7.2 சதவீதமும் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் குறைந்து வரும் உள்நாட்டுத் தேவை, சரியும் நுகர்வுகள், சரிந்து வரும் முதலீட்டுத் தேவைகள் பல்வேறு இந்திய தொழில் துறைகள் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் மந்த நிலை, குறிப்பாக சரிந்து வரும் இந்திய ஆட்டோமொபைல் விற்பனை போன்றவைகள், இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. 

”இனி வரும் காலங்களில், இந்தியாவின் நிதிக் கொள்கைகளில், மேலும் வட்டி விகிதங்களைக் குறைத்து, இந்திய அரசாங்கத்தின் நிதி நிலைகளை மேம்படுத்தி, இந்திய பொருளாதாரத்தில் இருக்கும் ஆபத்துகளை குறைப்பார்கள்" என அரசின் நடவடிக்கைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது ஐஎம்எஃப்.

கடந்த மார்ச் 2019 காலாண்டில், இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி சுமார் 5.8 சதவீதமாக சரிந்தது. அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஜிடிபி 6.6 சதவீமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் மார்ச் 2019 காலாண்டில் சரிந்திருக்கிறது. ஆண்டு கணக்கில் 2018 - 19 நிதி ஆண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி 6.8 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய 2017 - 18 நிதி ஆண்டில் ஜிடிபி 7.2 சதவீதமாக இருந்தது கவனிக்க வேண்டி இருக்கிறது.